மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா புத்தன்கடை பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் இருக்கன்துறை ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. அங்கிருந்து கனிம வளங்களை கொண்டு செல்வதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. அதாவது குவாரியில் இருந்து கற்களை அனுமதியின்றி கேரளாவுக்கு நாள்தோறும் ஏற்றி செல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பகுதியில் சட்டவிரோதமாக 5 லட்சம் டன் கற்களை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்த குவித்து வைத்துள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் ரூ.200 கோடி. இதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. கனரக லாரிகளில் கற்கள் கொண்டு செல்வதற்கான பாஸ் பெறுவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன. இதன் மூலம் இப்பகுதி வளங்கள் அழிக்கப்படுவது ஏற்புடையதல்ல. எனவே சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுப்பதற்கும் அவற்றை அனுமதியின்றி கொண்டு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் விவேக்குமார் ஆஜராகி, குவாரியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கற்கள் ஏற்றி செல்வதாக அனுமதிபெற்று விட்டு கேரளாவுக்கு கடத்துவது சட்டவிரோதம் என தெரி வித்தார். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் தற்போது எந்தவிதமான குவாரி பணிகளும் நடைபெறவில்லை என்று அரசு வக்கீல் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தனியார் நிறுவனத்துக்கு கற்களை கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிச் சீட்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் நாள்தோறும் 16 சக்கரங்களை கொண்ட 60 கனரக லாரிகளில் பல நூறு டன் கற்களை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்வதை தடுக்க வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார். மேலும் குவாரி உரிமம் 2022-ம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்களை பார்க்கும் போது கற்களை வெட்டி எடுக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது என்பதை காட்டுகின்றன.
இதுதொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்கு வக்கீல் கமிஷனராக முகமது முகைதீன் என்ற வக்கீல் நியமிக்கப்படுகிறார். அவர் கனிமவளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி வீடியோ, புகைப்படங்களை எடுத்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
