பெரிதும் எதிர்பார்க்கப்படும் 2026 கேரளா சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலவச சிலிண்டர்கள் முதல் இல்லத்தரசிகள் மாதந்தோறும் பயன்படுத்தும் வகையில் ரீசார்ஜ் கார்டு வரை பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கேரள பாஜக கூட்டணி கட்சிகள்
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக (98) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரத் தர்மசேனா (22), டி20 பார்டி (19) மற்றும் சுயேட்சைகள் (1) இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை பார்த்துவிடலாம்.
- பெண்களுக்கு பாரதிய ஆரோக்கிய சுரக்ஷா கார்டு வழங்கப்படும். இதன்மூலம் மாதந்தோறும் 2,500 ரூபாய் மதிப்பிலான மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
- கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
- திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும். அதாவது, புல்லட் ரயில் சேவை கொண்டு வரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
- ஏழை குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
- சபரிமலை, குருவாயூர் தேவசம் போர்டுகள் புதுப்பிக்கப்படும். இதன்மூலம் பாரம்பரியம் காக்கப்படும்.
- கேரளாவின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
பிரதமரை புறக்கணித்த Annamalai! வியூகம் என்ன?
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அறிவிப்பு
இவ்வாறு பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக சமீபத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 8,000 ரூபாய் மதிப்பில் இல்லத்தரசிகளுக்கு கூப்பன் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டது. இதைக் கொண்டு அருகிலுள்ள கடைகளில் வீட்டிற்கு தேவையான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன், ஏசி போன்ற பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
ஆனால் கேரளாவில் பாஜக அறிவித்திருப்பது மாதந்தோறும் 2,000 ரூபாயை பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ரீசார்ஜ் கார்டு. 5 ஆண்டுகள் ஆட்சி தொடரும் பட்சத்தில் கிட்டதட்ட ஒரு லட்சத்து 20 ரூபாய் மதிப்பில் பொருட்களை வாங்கி கொள்ள கேரள மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இம்மண்ணில் இடதுசாரிகள், காங்கிரஸ் என மாறி மாறி தான் ஆட்சி அமைத்து வருகின்றனர். இதை சுட்டிக் காட்டி நிதின் நபின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இடதுசாரிகள் vs காங்கிரஸ் பிரதான மோதல்
LDF எனப்படும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் UDF எனப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி என இரண்டு கூட்டணிகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், தேவைப்படும் நேரங்களில் விமர்சித்து கொண்டும் அரசியல் செய்கின்றனர். இதன்மூலம் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு காய் நகர்த்தி வருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசுகையில், கேரளாவில் இம்முறை தாமரை மலரும். ஏனெனில் மக்களிடம் பெரிய ஆதரவை பார்க்க முடிகிறது என்றார்.
கடந்த 2021 தேர்தலில் பாஜக 11.30 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் 16.68 சதவீத வாக்குகள் உடன் ஒரு எம்.பி தொகுதியையும் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினர். இவ்வாறு வாக்கு வங்கி உயர்ந்து வருவதால் இம்முறை சற்று கூடுதல் நம்பிக்கை உடன் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கின்றனர். மே 4ஆம் தேதி அன்று வெளியாகும் முடிவுகளில் யாருடைய கனவு பலிக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
