கேரள பாரம்பரிய வேட்டி அணிந்து மேடையில் தோன்றிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

பாலக்காடு

கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் மே 23-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், கேரள சட்டசபைக்கான தேர்தல் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, 140 இடங்களை கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி கேரளாவுக்கு இன்று வருகை தந்துள்ளார். இதனை முன்னிட்டு அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், கேரள மக்களில் ஒருவராக, அவர்களிடையே இன்று இருப்பதற்காக ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறேன். பாலக்காட்டில் இன்று நடைபெறும் அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளேன். திருச்சூரில் நடைபெற உள்ள சாலை வாகன பேரணியிலும் பங்கேற்க உள்ளேன்.

Also Read
இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல்
கேரள பாரம்பரிய வேட்டி அணிந்து மேடையில் தோன்றிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

கேரளாவில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவான மனநிலை உள்ளது. இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் திறனற்ற அரசாட்சி போதும் என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டனர் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில், கேரளாவின் பாலக்காட்டுக்கு வருகை தந்த அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, கேரளாவின் பாரம்பரிய உடையான முண்டு எனப்படும் வேட்டி அணிந்து மேடையில் தோன்றினார். அவருக்கு, சால்வை போர்த்தி, கேரளாவின் சிறப்பு வாய்ந்த பொருட்களை கட்சியினர் அன்பளிப்பாக வழங்கினர். அதனுடன் பிரதமர் மோடி, கேரளாவின் பிரசித்தி பெற்ற செண்டை மேளம் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து அவர் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்.

Source link