சென்னை,
சென்னை கே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “குடியிருப்பு பகுதியான எங்கள் பகுதியில் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெறாமல் கூட்டங்களை நடத்துகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டங்களுக்காக அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது.
மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டு, இந்த பகுதியில் கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர், “2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த அரசியல்கூட்டத்தைச் சுட்டிக்காட்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் எங்கு, எப்போது கூட்டம் நடத்தப்பட்டது? என்று எந்த விவரமும் மனுவில் இல்லை. மாறாக கட்சிகளுக்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
