கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா பதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
துருவ் சார்ஜாவின் ‘கேடி தி டெவில்’ படத்தின் ‘திற நீ எந்தன்’ பாடல் வெளியானது. இப்படத்திலிருந்து இந்தியில் வெளியான குத்துப்பாடல் சர்ச்சையில் சிக்கியது. அப்பாடலில் நோரா பதேஹி, சஞ்சய் தத் ஆடியிருந்தனர்.
இதில், ஆபாசமான வார்த்தைகள் இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து யூடியூப் தளத்தில் இருந்து இப்பாடல் நீக்கப்பட்டது. இயக்குநர் பிரேம், மன்னிப்புக்கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதுபற்றிய பேசிய கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் ஜெயமாலா, “அந்த சர்ச்சைப்பாடல் குறித்து பேசுவதற்காக பிரேம், தயாரிப்பாளரை அழைத்திருந்தோம். இருவரும் கலந்துகொள்ள இயலவில்லை. அவர்கள் தரப்பில் பேசியவர்கள், பாடல் வரிகள் விரைவில் மாற்றப்படும் என்று உறுதியளித்தனர். அந்தப் பாடல் ஏற்கெனவே பல்வேறு தளங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது” என்றார்.
இதற்கிடையே கனடாவைச் சேர்ந்த, நோரா பதேஹி இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதற்கான, பணி அனுமதி தொடர்பாகப் புதிய சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவில் தங்குவதற்கான சலுகைகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள வழக்கறிஞர்கள் குழு ஒன்று, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் நடிகை மட்டுமே, அவருக்கும் பாடல் வரிக்கும் தொடர்பில்லை என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.
