கோவை,
கோவையை அடுத்த கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-வது அணி உள்ளது. இங்கு கமாண்டன்ட்டாக போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார். அவர் அங்கு பணிபுரிந்து வந்த பெண்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு செய்யும் குழுவான விசாகா குழுவுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி விசாரணை கூடுதல் டி.ஜி.பி. நிலையில் உள்ள பெண் உயர் அதிகாரி தலைமையில் நடந்து வருகிறது. இந்த குழு பரிந்துரையின்பேரில் கடந்த மாதம் செந்தில்குமார் சஸ்பெண்டு (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் கோவை தெற்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது அணி கமாண்டன்ட்டாக பணியாற்றிய செந்தில்குமார் மீது பாலியல் புகார் எழுந்தது. விசாகா கமிட்டி எடுத்த நடவடிக்கையால் தைரியமும், நம்பிக்கையும் பெற்ற பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது கூறப்பட்டு உள்ள புகார் தொடர்பாக விசாரணை செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.
