மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்டதால், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். அந்த கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. ராமதாஸ் அணியுடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதனால் சொந்த கட்சி, ராமதாஸ் அணி வேட்பாளர்களை ஆதரித்து சசிகலா பிரச்சாரம் செய்து வருகிறார்.
தனது பிரச்சாரத்தில் திமுக மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோரை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் அவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சசிகலா கூறுகையில், நான் சிறையில் சென்ற சமயத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென ஒருவரை முதல்வராக்கிவிட்டு போனேன். அதுதான் நான் பண்ணது. ஆனால் 3 மாதத்திற்குள் என்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இன்று வரைக்கும் அது என்ன விஷயம்ன்னு எனக்கு தெரியவில்லை.
சிறைச் சாலையில் இருந்த போது எதுக்காக இதை செய்தார் என்றே தெரியவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு நான் வெளியே வந்தேன். எனக்கு கொரோனா வந்துவிட்டது. சிறைச்சாலையில் பெண்கள் பகுதியில் யாருக்கும் கொரோனா இல்லை. திடீரென ஒரு பெண் என் வார்டுக்குள் வந்தாங்க. அவுங்கள சிறையில் நான் பார்த்ததே இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண், எப்படி உள்ள வந்தாங்கன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம். மறுநாளில் இருந்து எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு. சிறைச்சாலையில் 200 பேருக்கு மேல் இருக்கோம். எனக்கு மட்டும் கொரோனா பாதிப்பு. 85% எனக்கு கொரோனா வந்தது. அதிலிருந்து நான் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் ” என்றார்.
