திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே கடந்த 2023-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மடத்துபட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 26) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(29) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அருண்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் இன்று குற்றவாளிக்கு கொலை முயற்சி குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரசு உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு மீனா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் பால்மாயாண்டி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
