கொல்கத்தா பாலியல் பலாத்காரம், கொடூர கொலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வேட்புமனு தாக்கல்

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரியில் 31 வயது முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர வகையில் கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கு விசாரணையில் போலீசாரின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த கொல்கத்தா ஐகோர்ட்டு, பின்னர் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. இதன்பின்பு, வழக்கில் பல தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மருத்துவ மாணவியின் தாயார் ரத்னா தேப்நாத், பா.ஜ.க. சார்பில் பனிஹாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை முன்னாள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி முன்னிலையில் அவர் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி இரானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீதி, மரியாதை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக போராடி வரும் வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தேப்நாத் பிரதிபலிக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து இரக்கமே இல்லாமல் துன்புறுத்தலுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகி வருகிறார் என தெரிவித்து உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் வங்காள மக்கள் களைத்து போய் விட்டனர். இதனை தேப்நாத்துக்கு கிடைத்துள்ள திரளான மக்கள் ஆதரவு உறுதிப்படுத்தி உள்ளது என்றும் இரானி குறிப்பிட்டு உள்ளார்.

Source link