கொளத்தூரில் 4வது முறை வேட்புமனு தாக்கல்… இம்முறை திமுகவிற்கு பெரிய வெற்றி- மு.க.ஸ்டாலின் பெருமிதம்! – big victory for dmk in 2026 election mk stalin after kolathur nomination

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுவென நடந்து கொண்டிருக்கிறது. முதல் நாளில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரது பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Stalin Kolathur Constituency Nomination Filed 2026 Polls(புகைப்படங்கள்Samayam Tamil)
1984ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். இதில் 7 முறை வெற்றி, 2 முறை தோல்வி அடைந்துள்ளார். முதல் 6 முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் கண்ட நிலையில், அடுத்து 3 முறை கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். மு.க.ஸ்டாலின் தேர்தல் வரலாற்றில் கடந்த 2021 தேர்தலில் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார். அதாவது, 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஆதிராஜாராமை வீழ்த்தினார். இந்நிலையில் 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று காலை தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

பின்னர் தனது பரப்புரை வாகனத்தில் ஏறி புறப்பட்டார். வழி நெடுகிலும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறே சென்றது கவனிக்கத்தக்கது. இதற்கிடையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

கடந்த மூன்று முறை நின்றதை காட்டிலும், நான்காவது முறை அதிக அளவிலான ஆதரவை கண்கூடாக பார்க்கிறேன். இது மக்கள் நலக் கூட்டணி அல்ல. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. டெல்லியை எதிர்த்து தமிழ்நாடு போராடி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு உரிமையை காப்பாற்றுவதற்காக இந்த வெற்றி பெரிய வெற்றியாக அமையப் போகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.