தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கொளத்தூரில் பிரச்சாரம்
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த பகுதி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என தனது பேச்சை தொடங்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தின் இன்றைய இந்த நிலைமைக்கு தீய சக்தி திமுக தான் காரணம் என கடுமையாக சாடினார்.
வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிய விஜய்
மேலும் அவர் பேசுகையில் “இப்படி ஒன்று இருக்கும் உதவாத ஆட்சியை நடத்திவிட்டு விரைவில் விடை பெறப் போகிற ஸ்டாலின் சார் நாட்டின் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம்” என விமர்சித்தார். தொடர்ந்து சோறு தண்ணி இல்லாமல் கூட இருந்து விடலாம், ஆனால் அடிப்படை பாதுகாப்பு இல்லாமல் எப்படி இருப்பது என்ற கேள்வியையும் எழுப்பினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மக்கள் கூட்டம் டிவிகே டிவிகே என ஆர்ப்பரிக்க தொடங்கியது.
தொடர்ந்து பேசிய அவர், ” தீய சக்தி திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பும் நிம்மதியும் இல்லாமல் வாழ்கின்றனர்” என்றார். மேலும் ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றிய கவலையே இல்லை என விமர்சித்து இருக்கிறார். தொடர்ந்து கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு பதிலாக பிரபுவை குறிப்பிட்டு பேசிய விஜய் “நான் வேறு அவர் வேறு அல்ல தயவு செய்து விசில் சின்னத்திற்கு உங்கள் வாக்கை அளியுங்கள்” என பேசினார். கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பெயரை மாற்றிக்கூறி வாக்கு சேகரித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
