சென்னை,
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிவிற்பனைக்கு வருகிறது. ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் முழுவதுமாக மூடப்பட்டுகிடக்கிறது.
அதேபோல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதிகள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் உணவு சமைப்பதை நிறுத்தி விட்டனர். மேலும் சாலையோர தள்ளு வண்டி டிபன் கடைகளும் திறக்கவில்லை. அதேபோல் திறக்கப்பட்டு உள்ள ஒரு சில எண்ணிக்கையிலான ஓட்டல்களும் குறைந்த வகையில் மட்டுமே டிபன் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் கடந்த 3 நாட்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், கேரட், பாகற்காய், புடலங்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்து உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். அதே போல் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளிலும் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
