கோவை,
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான வெற்றி கூட்டணி அமைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த 5 ஆண்டு காலமாக தி.மு.க. எந்த திட்டமும் கோவைக்கு கொடுக்கவில்லை. எனவே கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் 210 தொகுதிகளை வென்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார்.
மக்கள் தெளிவாக உள்ளார்கள். மீண்டும் கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி அமையும். இதன் மூலம் மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை கொண்டு வருவோம். குடிநீர் வரி, சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குப்பைக்கு கூட வரி போடுகிறார்கள். தி.மு.க.வின் செயல்பாட்டில் அதிருப்தியில் இருந்ததால் தி.மு.க. கவுன்சிலர் அ.தி.மு.க.வுக்கு வந்து உள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்து உள்ளோம். எனவே கோவையில் எங்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வெல்ல முடியாது. கோவை அ.தி.மு.க. கோட்டை. தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சி கிடைக்கும் என்றார்.
