சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. கரூருக்கு பதிலாக அவர் தொகுதி மாறியது சம்பந்தமாக பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் கோவை பகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து செந்தில் பாலாஜி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
தொகுதி மாறிய செந்தில் பாலாஜி
இதனிடையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த முறை கரூரில் அவர் போட்டியிட்டு வென்ற நிலையில், தற்போது தொகுதி மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு இதற்கான காரணம் பற்றியும் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
தேர்தல் பணிகளுக்கான அலுவலகம் திறப்பு
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைக்கு இணங்க கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். தற்போது தேர்தல் பணிகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்து வேலைகளை துவங்கியுள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலும் முடிந்ததும் துவங்கிய பணி
வரக்கூடிய 23 ஆம் தேதி நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான இந்த பணிகளில், கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதற்கான வேலைகளை துவங்கியுள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததுமே இந்த பணிகளை ஆரம்பித்தோம். குறிப்பாக ஓரணியில் தமிழ்நாடு, எஸ்ஐஆர் திருத்தம் ஆகியவற்றை ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மேற்கொண்டோம்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டி
வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளை சென்றோம். மக்களின் எண்ணம் மீண்டும் தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்கள். அந்த வகையில் கோவை மக்களும் அதற்கு தயாராக உள்ளார்கள். என்னை பொறுத்தவரைக்கும் 2006 ஆம் ஆண்டு துவங்கி கரூரில் போட்டியிட்டு வந்தேன். தற்போது கழகத் தலைவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளார்.
பத்து தொகுதிகளிலும் தவறிய வெற்றி வாய்ப்பு
இதனை எப்படி பார்க்கிறேன் என்றால், கோவையில் கடந்த முறை பத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். எனவே இந்தமுறை மகத்தான வெற்றி பெற வேண்டுமென இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கோவை மாவட்டம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவோம். அதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.
வானதி சீனிவாசன் விமர்சனம்
தொடர்ந்து வானதி சீனிவாசன் பயந்து தொகுதி மாறி விட்டதாக வைத்த விமர்சனங்களுக்கு அவர்கள் எதற்காக தெற்கில் இருந்து வடக்கு போயிருக்காங்க என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலை பார்த்து பயப்படும் ஆள் கிடையாது. அதிமுகவின் கோட்டையா கோவை என்பதை கடந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் பார்த்தோம். அதே முடிவுகள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என நம்பிக்கையுடன் பேசியுள்ளார் செந்தில் பாலாஜி.
