கோவை: மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – மருத்துவமனையில் சிகிச்சை

கோவை,

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி ஒன்றில் நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு மற்றும் சாம்பாரை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, சாம்பாரில் இறந்தநிலையில் பல்லி ஒன்று கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் 30 மாணவர்கள், 13 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் 43 மாணவ-மாணவிகளை அனுமதிக்கப்பட்டு, 5 டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். குழந்தைகளின் நிலையை அறிய பெற்றோர் குவிந்ததால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர் சிலர் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன். மேயர் ரங்கநாயகி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், “உணவில் பல்லி விழுந்ததாக சொல்லப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள உணவுக் கூடத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பணியாளர்களின் கவனக்குறைவு காரணமா? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்” என்று கூறினார்.

Source link