சென்னை,
சென்னை சங்கமம் மற்றும் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ள சங்கமம் கலைத் திருவிழாவில் பங்கேற்க கலைக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா சென்னையில் 20 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு இடங்களில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் தமிழ்நாட்டின் முக்கிய 8 நகரங்களில் இவ்விழா நடத்தப்படும்.
இவ்விழாக்களில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை நிரப்பி தங்கள் பகுதிக்கான கலை பண்பாட்டுத்துறையின் மண்டல அலுவலகங்களுக்கு மார்ச் 31-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.
கலைக்குழுக்களின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2027-ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.
கலை பண்பாட்டுத்துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக்கலை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
