சென்னை, திருவல்லிக்கேணி, செங்கல்வராயன் தெருவில் வசித்து வரும் யுவராஜ் என்பவரின் மனைவி திலகா (வயது 46), அவரது எதிர் வீட்டில் வசித்து வந்த துளசிராமன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையைில் 2024-ம் ஆண்டு துளசிராமனும் அவரது மனைவியும் சேர்ந்து திலகாவிடம் கத்தீட்ரல் சாலையில் உள்ள பூங்காவிலும், குத்தாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையத்திலும் அரசாங்க கடைகள் விற்பனைக்கு வருவதாகவும், தனக்கு அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், பல உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் கூறி, மேற்சொன்ன கடைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
அதன் பேரில் திலகா மற்றும் அவரது 2 உறவினர்கள் சேர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு ரொக்கமாகவும், ஆன்லைன் பணபரிமாற்றம் மூலமாகவும் மொத்தம் ரூ.17.5 லட்சம் பணத்தை துளசிராமனிடம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் மேற்சொன்னவாறு கடைகள் பெற்றுத்தராமல் துளசிராமன் ஏமாற்றி வந்த நிலையில், பணத்தை திரும்ப கேட்டபோது, துளசிராமன் மற்றும் அவரது மனைவி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து திலகா D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வசித்து வரும் பெர்னாட்ஷா(33) என்பவர் 2022-ம் ஆண்டு, சென்னையில் தங்கி மெக்கானிக் ஆக வேலை செய்து வந்துள்ளார். அப்போது தெரிந்த நபர் மூலம் அறிமுகமான திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் துளசிராமன், தனக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்வாக்கு உள்ளதாகவும், அங்கு இலகுரக வாகனம் ஓட்டுநர் பணி காலியாக உள்ளதாகவும், பெர்னாட்ஷாவுக்கு அந்த வேலையை வாங்கி தருவதற்கு ரூ.4 லட்சம் ஆகும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பெர்னாட்ஷா 27.8.2022 அன்று பணம் ரூ.4 லட்சத்தை துளசிராமனிடம் அவரது வீட்டில் வைத்து கொடுத்துள்ளார். இதுவரையில் துளசிராமன் மேற்சொன்ன ஓட்டுநர் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் தன்னை ஏமாற்றி வருவதாக பெர்னாட்ஷா D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அதில் மேற்சொன்ன 2 புகார்தாரர்களும் குறிப்பிட்டது உண்மையென தெரிவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 2 மோசடி வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளியான சென்னை, திருவல்லிக்கேணி, சிங்காராச்சாரி தெருவைச் சேர்ந்த துளசிராமன்(44) என்பவரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட துளசிராமன் சமீபத்தில் தன்னை இளைய கட்டபொம்மன் என்றும், வீரபாண்டிய கட்டபொம்மனின் 8-வது வாரிசு என்றும் கூறி, கட்டபொம்மன் போல் வேடணிந்த ஒருவரை அழைத்துக் கொண்டு கடந்த மார்ச் 4ம் தேதி திருத்தணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவற்காக அண்ணா அறிவாலயம் சென்று விருப்ப மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட துளசிராமன் விசாரணைக்குப் பின்னர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
