சென்னை,
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தயாராகி வருகிறது. இதையொட்டி கடந்த மாதம் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை த.வெ.க. பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து, விஜய் இன்று (செவ்வாய்கிழமை) முதல் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது.
முதல் நாள் நேர்காணலில் யார், யார் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நேர்காணல் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யுடன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் நேர்காணலை நடத்த உள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. வழக்குக்காக விஜய் டெல்லி செல்ல இருந்தது. ஆனால், கட்சி பணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சி காரணமாக, சி.பி.ஐ. அலுவலகம் வர இயலவில்லை என்று விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
