சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சோதனை சாவடிகளில் தீவிர சோதனை: தூத்துக்குடி எஸ்.பி. நேரில் ஆய்வு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்ற மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, வாகனங்களின் விபரங்களை பதிவேட்டில் பராமரித்தும் மேலும் சோதனை சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் மாவட்டத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களயும் ஆய்வு செய்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் நடைபெற்று வரும் காவல்துறையினரின் கண்காணிப்பு பணியை மாவட்ட எஸ்.பி. மதன் நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி. நிரேஷ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜுன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link