சட்டமன்ற தேர்தல்: சென்னையில் 5 நாட்களில் ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை,

சென்னை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் கடந்த 5 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை என்ற வகையில் 48 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என்ற வகையில் 48 நிலையான குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 சுழற்சி முறையில் தொடர்ந்து விறுவிறுப்பாக கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகள், நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறக்கும் படை குழுக்கள் திடீர் சோதனைகள் மூலம் அதிக அளவு பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் போன்றவை சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றன. இதேபோல், நிலையான கண்காணிப்பு குழுக்கள் முக்கிய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றன. எப்போது எங்கிருந்து சோதனையில் ஈடுபட வருகிறார்கள் என்பத தெரியாத வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் 5 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.2 கோடியே 52 லட்சத்து 48 ஆயிரத்து 15 ரொக்க பணமும், 12.85 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எழும்பூர், விருகம்பாக்கம், பெரம்பூர், கொளத்தூர், துறைமுகம், ராயபுரம், தியாகராயநகர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இந்த பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் அல்லது பொருட்கள் வினியோகம் செய்ய முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் சந்தேகமான செயல்பாடுகளை கண்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source link