திமுகவில் இருந்து விலகல்
இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், திமுகவில் இருந்து விலகுவதாக பி.டி. செல்வகுமார் அறிவித்துள்ளார். அவருடைய இந்த திடீர் முடிவு அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமாருக்கு மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம்
இது சம்பந்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குமரி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த திமுகவில் எனக்கு அங்கீகாரம் கிடைக்குமென எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு அதிகாரம் அளிப்பதை காலம் தள்ளிப் போடுகிறது. எனவே மீண்டும் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக என்னுடைய பணியை தொடர விரும்புகிறேன். இதன் காரணமாக திமுகவில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பி.டி. செல்வகுமார் பேட்டி
இந்நிலையில் திமுகவில் இருந்து விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் பி.டி. செல்வகுமார் , குமரி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் திமுகவில் இணைந்தேன். தொடர்ந்து கடன் வாங்கியாதவது பல பணிகளை குமரியில் செய்து வந்தேன். ஏற்கனவே 27 ஆண்டுகள் விஜய்யிடம் இருந்தேன். அவர் கைவிட்டதும் கலப்பை மக்கள் இயக்கம் துவங்கினேன். அப்போது பலரும் மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிகாரம் வேண்டும் என்று சொன்னார்கள்.
சதியால் வீழ்த்தப்பட்டேன்
இதற்காக திமுகவில் இணைந்தேன். என் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கும்ல. எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும். எனக்குதான் ஒரு சீட்டு வருமென்று பக்கத்தில் நெருங்கி வரும்போது, என்ன சதி நடந்ததுன்னு தெரியலை. கடைசிக்கட்ட சதியால் நான் வீழ்த்தப்பட்டேன். அரசியல் சதுரங்க விளையாட்டில் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். அதான் எனக்கு மிகப்பெரிய ஆதங்கம் என தெரிவித்துள்ளார் பி.டி. செல்வகுமார்.
தவெக விஜய்க்கு எதிராக போட்டி
திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமார் குமரியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்திருந்தார். இதற்காக அவர் நேர்காணலும் செய்யப்பட்டார். அதன் பின்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தனக்கு சீட் வழங்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து பயணிப்பேன். எனக்கு மாநில வர்த்தக அணி தலைவர் என்ற மிகப்பெரிய பதவி திமுகவில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். அதோடு விஜய்க்கு எதிராக போட்டி போடுவீர்களா என்ற கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
பிற கட்சிகளுக்கு ஆதரவு
அதற்கு திமுக தலைமை எங்கு சொல்கிறதோ அங்கு போட்டி போடுவேன் எனவும் கூறியிருந்தார் பி.டி. செல்வகுமார். இந்நிலையில் தனக்கு சீட் வழங்கப்படவில்லை என கூறி திமுகவில் இருந்து விலகியுள்ளார். மேலும் பல கட்சிகளிடம் இருந்து எனக்கு போன் வந்துக்கொண்டே இருக்கிறது. என் சேவையை அங்கீகாரம் செய்து என்னிடம் வந்தால் அவர்களுக்கு நான் ஆதரவு தெரிவிப்பேன் எனவும் பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
