கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனு
இதையடுத்து, கடந்த 2006 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இதற்கு முன்பாக, 1991 ஆம் ஆண்டு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் பாரம்பரிய நடைமுறை உறுதி செய்யும் விதமாக கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தான் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது.
பெண்களின் உரிமையை பறிக்கும் தீர்ப்பு
மேலும், இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக வாதிடப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு 2018 செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து, 4:1 என்ற பெருமான்மையில் 10 முதல் 50 வயதுகுட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்தலாம் என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த தீர்ப்பால் கேரளா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் உச்ச நீதிமன்றத்தில் டஜன் கணக்கான மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்
அதன் பிறகு, 2019 நவம்பர் 14 ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட வேறொரு அர்சியல் சாசன அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோவில் , மசூதிகள் மற்றும் தர்காக்களில் முஸ்லீம் பெண்களுக்கு அனுமதி வழங்குதல், பார்சி இன பெண்கள் அவ்வினம் சாராத ஆண்களை திருமணம் செய்தல், தாவூதி போஹ்ரா சமூகத்தினரிடையே காணப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) வழக்கம் என வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை சுட்டிக்காட்டியது.
பெரிய அமர்வு விசாரணைக்கு மாற்றம்
மேலும், ஒரு விவகாரத்தினை மட்டும் அடிப்படையாக கொண்டு பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து முடிவுகளை எடுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில் அனைத்து வழக்குகளும் ஒன்றாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களில் இருந்து எழும் அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.
கேரள சபரிமலை கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்தும், பல்வேறு மதங்கள் கடைப்பிடிக்கும் மத நடைமுறைகள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரம்: Evidence Kathir வெளியிட்ட ஆய்வு முடிவுகள்- என்னென்ன?
6 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணைக்கு வந்த வழக்கு
இந்நிலையில், 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த விவகாரம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிலவும் கட்டுப்பாடுகள் மத நம்பிக்கையின் ஒரு பகுதி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது பெண்களை இழிவுபடுத்துவதற்கோ அல்லது தீட்டு போன்ற காரணங்களுக்காகவோ அல்ல; மாறாக, ஐயப்ப பகவானின் நைஷ்டிக பிரம்மச்சாரி என்ற தனித்துவமான தன்மையை பாதுகாக்கவே இந்த மரபு கடைப்பிடிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்ய அனுமதித்த தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எனவே, மதப் பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றும், அனைத்து மத விவகாரங்களிலும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இன்றும் இந்த வழக்கு தொடர்பான வாதங்களை மத்திய அரசு முன்வைக்க உள்ளது. எனவே, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இந்தியாவில் சட்டம் மற்றும் மதத்திற்கு இடையிலான உறவை வரையறுப்பதில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
