சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது: பிரதமர் உரைக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களவையில் நேற்றைய தினம் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், நாடு முழுவதும் சமையல் எரிவாயு, உரம் சீராக விநியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறானாது. நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்காததால் மக்கள் விறகு அடுப்பிற்கு மாறிவருகின்றனர். வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேநீர் நிலையங்கள், உணவங்கள் மூடப்பட்டுள்ளன. பல உணவு விடுதிகளில் வழக்கமான உணவுகள் வழங்கப்படுவதில்லை.

இதனால் பொதுமக்களும், சுற்றுலா செல்வோரும், வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வோரும் உணவு கிட்டாமல் திண்டாடி வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைகளை இழந்திருப்பதுடன், உணவு கிட்டாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் மோடி அவர்களோ முழுப் பூசணிக்காயை ஒரு தட்டுச் சோற்றில் மறைப்பது போல உண்மையை மறைக்க முயல்கிறார்.

ரஷ்யாவிடமிருந்து மலிவுவிலையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்ததை, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மோடி அரசு நிறுத்தியது தான், இந்த அவலத்திற்கு முக்கியக் காரணமாகும்.

உலகம் முழுவதும் மேற்காசியப் போர் நிலைமையால் உரத்தட்டுப்பாடு, ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உலக நாடுகள் இதனால் கவலையடைந்துள்ளன. இந்தியாவிலும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால், பிரதமர் மோடி அவர்களோ உரம் தட்டுப்பாடு இல்லை, உரம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக உண்மைக்கு மாறான தகவலை மக்களவையில் கூறியுள்ளார். பிரதமரின் உண்மைக்கு மாறான உரை கண்டனத்திற்குரியது.

மேற்காசியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத் தொழிலாளர்களும் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்புக் குறித்து மோடி அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. ஆனால், அவர்களின் பாதுகாப்புக் குறித்தும் அக்கறை செலுத்தப்பட்டுவருவதாக பிரதமர் கூறுவது வருத்தமளிக்கிறது.

மேற்காசியப் போரை தடுக்கவோ, நிறுத்தவோ, பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவோ ஒன்றிய அரசு முயலவில்லை. மாறாக, ஈரான் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டு உலக நாடுகளிடம் தனிமைப்பட்டு நிற்கிறது. இனிமேலாவது , மோடி அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈரான் மீதான தாக்குதலை நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிக்க முன்வர வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவரவும், நீடித்த அமைதியும், சமாதானமும் நிலவுவதை உறுதி செய்திட, சமாதானத்தை விரும்பும் உலக நாடுகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணைந்து இந்திய ஒன்றிய அரசு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. என தெரிவித்துள்ளார்.

Source link