அமைதி, மனத் தெளிவு மற்றும் தினசரி அழுத்தத்திலிருந்து ஓய்வு பெற தியானம் போன்ற நல்வாழ்வு முறைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒரு வித்தியாசமான நடைமுறை உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. அது தான் ‘சவப்பெட்டியில் படுத்தல்’.
ஜப்பான் நாட்டில் தோன்றிய இந்த முறையில், ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் சவப்பெட்டிக்குள் அமைதியாக படுத்து இருக்க வேண்டும். டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில், இந்த அமர்வின்போது பங்கேற்பாளர்கள் மென்மையான இசையைக் கேட்கவோ அல்லது அமைதியாக தங்களது எண்ணங்களில் மூழ்கவோ செய்கிறார்கள். மேலும், அன்புக்குரியவர்களை நினைத்து “பிரியாவிடை கூறுவது எப்படி இருக்கும்?” என்ற உணர்வை மனதில் கற்பனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
முதலில் ஒரு இறுதிச் சடங்கு நிறுவனத்தில் மன அமைதிக்காக தொடங்கப்பட்ட இந்த நடைமுறை, தற்போது மனநல உதவியாகவும் பரவியுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த முறையைப் பற்றி இருத்தலியல் உளவியல் நிபுணர் குர்லீன் பருவா கூறுகையில், “ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.
ஒரே அனுபவத்திற்கு அனைவரும் ஒரே மாதிரி பிரதிபலிக்க மாட்டார்கள். ஒருவரின் வாழ்க்கை பார்வை, ஆளுமை ஆகியவற்றைப் பொறுத்தே இது செயல்படும்,” என்றார். மேலும், ஆழ்ந்த சிந்தனை மற்றும் தத்துவ ஆர்வம் கொண்டவர்களுக்கு இது புதிய பார்வையை அளிக்கக்கூடும் என்றும், உடனடியாக பயத்தை குறைக்காவிட்டாலும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க உதவலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனை அவர் மெமென்டோ மோரி என்ற தத்துவ கருத்துடன் ஒப்பிட்டார். “நாம் இறப்போம்” என்ற உண்மையை நினைவுபடுத்துவது ஒருபுறம் பாரமாக இருந்தாலும், மறுபுறம் மனதிற்கு ஒரு விடுதலையையும் தரக்கூடும்.
மூளையில் என்ன மாற்றம்? மௌனம், குறைந்த புலன் உள்ளீடுகள் மற்றும் இசை போன்றவை, மனிதனின் கவனத்தை வெளியுலகத்திலிருந்து உள்ளார்ந்த சிந்தனைகளுக்கு திருப்புகின்றன. இதனால் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தெளிவாக கவனிக்க முடியும். உடனடி எதிர்வினைகளை கட்டுப்படுத்த முடியும்.
“தன்னையே கவனிக்கும்” ஒரு தனித்துவ அனுபவம் உருவாகும். மேலும், மரணம் பற்றிய சிந்தனை இணைந்தால், வாழ்க்கையின் மதிப்பை உணரச் செய்யும் ஆழமான புரிதலை உருவாக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எல்லோருக்கும் பொருந்துமா? இந்த பயிற்சி அனைவருக்கும் ஏற்றது அல்ல. சிலருக்கு இது மனஅழுத்தம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
