கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், இன்று காலை 10.30 மணியளவில் இந்த வழக்கில் தீர்ப்பளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை நீதிமன்றம் கூடிய நிலையில், மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மாலை 5 மணியளவில் நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார்: உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். சாத்தான்குளத்தில் போலீசார் கம்பு, கம்பியால் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்கவில்லை; ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வருகிறது. இருவரையும் அடித்து நாம் பழகி கொள்வோம் என காவலர்கள் இடையே பேசி கொண்டு இருந்து இருக்கிறார்கள்.
நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்கும் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. காயமடைந்த தந்தை, மகன் அணிந்திருந்த ஆடைகள் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை; ரத்தக்கறை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போட போலீசார் கூறியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையே தடய அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது. தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மீதான வழக்கு பொய் வழக்கு என்பது விசாரணையில் தெரியவந்தது.
சிபிஐ தரப்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்கிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள். ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ், காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயில் முத்து, தாமஸ் ஆகியோரும் குற்றவாளிகள். குற்றவாளிகள் 9 பேருக்கும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 30ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும். குற்றவாளிகள் 9 பேரின் ஊதிய விவரம், சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

