சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் வழக்கு- தீர்ப்பு எப்போது தெரியுமா? – sathankulam jayaraj fenix death case do you know when the verdict will be delivered

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) மரண வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

Sathankulam Case(புகைப்படங்கள்Samayam Tamil)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தவர் பி. ஜெயராஜ். அவரது மகன் ஜே. பென்னிக்ஸ். கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையை 15 நிமிடம் தாமதமாக மூடியதாகக் கூறி, ஜெயராஜை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கேட்கச் சென்ற அவரது மகன் பென்னிக்ஸையும் போலீசார் பிடித்துச் சென்றனர். அன்று இரவு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தவை ஒரு மனிதப் பேரவலத்தின் உச்சம்.

காவல் சித்ரவதை மற்றும் மரணம்

காவல் நிலையத்தில் வைத்து தந்தை மற்றும் மகன் இருவர் மீதும் காவலர்கள் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தனர். இரவு முழுவதும் கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் ஜூன் 22-ம் தேதியும், அவரது தந்தை ஜெயராஜ் ஜூன் 23-ம் தேதியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் ரத்தக் கறைகள் காவல் துறையின் அத்துமீறலை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டின.

வெடித்த போராட்டமும் நீதிமன்றத் தலையீடும்

இந்த மரணங்கள் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. #JusticeForJayarajAndBennix என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது. மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்தது. பெண் காவலர் ரேவதி அளித்த துணிச்சலான வாக்குமூலம், போலீசாரின் கொடூரத்தை உறுதிப்படுத்தியது. முதலில் சிபிசிஐடி (CB-CID) வசம் இருந்த வழக்கு, பின்னர் சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ-யின் அதிரடிப் புலனாய்வு

சிபிஐ சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 காவல்துறையினர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. (இதில் ஒருவர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தார்). காவல் நிலையத்தின் சுவர்களில் இருந்த ரத்தக் கறைகள், டிஎன்ஏ (DNA) பரிசோதனை மற்றும் செல்போன் பதிவுகள் என அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சிபிஐ அடுக்கியது.

6 ஆண்டு கால விசாரணை – நாளை தீர்ப்பு

மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வில்லாமல் நடந்தது. பல நூறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிபதி முத்துக்குமரன் நாளை (மார்ச் 23) இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளார். இந்தத் தீர்ப்பு தமிழக காவல்துறையின் எதிர்கால அணுகுமுறைக்கு ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.