சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வெல்வாரா? கைகொடுக்கும் ராதிகா + அமமுக + முக்குலத்தோர் கணக்கு! – will mukkulathor votes help nainar nagendran victory in sattur 2026 assembly polls

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதி மாறியுள்ள நிலையில், அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னணியில் அதிமுக தலைமையின் கணக்குகள் குறித்து விரிவாக அலசலாம்.

Nainar Nagendran BJP Winning Chances in Sattur Constituency(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக பாஜக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் இருந்தே, அதை வைத்து பல்வேறு அலசல்கள் அரசியல் நோக்கர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இம்முறை திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு பதிலாக சாத்தூரில் போட்டியிடுகிறார். அதாவது, வேறு மாவட்டத்தில் உள்ள தொகுதியை தேர்வு செய்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? திருநெல்வேலியில் என்ன பிரச்சினை? போன்ற கேள்விகள் எழக்கூடும். நிச்சயம் பல அரசியல் கணக்குகள் இருக்கின்றன.

சாத்தூர் தொகுதி நிலவரம்

நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் சார்ந்த சமூக வாக்குகள் சாத்தூரில் அதிகம் இருப்பது முதல் பிளஸ் பாயிண்ட். ஏற்கனவே எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற திருநெல்வேலியில் நயினார் மீது அதிருப்திகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்கள் பாஜகவின் செயல்பாடுகளால் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு போட்டியிடும் கூட்டணி கட்சிகளுக்கு பொதுமக்கள் மாறி மாறி வாக்களித்து வெற்றி பெறச் செய்வது மரபாகவே மாறிவிட்டது.

பிரதமரை புறக்கணித்த Annamalai! வியூகம் என்ன?

பாஜக அமைத்த பூத் கமிட்டிகள்

இதுபோன்ற விஷயங்கள் நயினாரை மட்டுமின்றி, அதிமுக தலைமையையும் சிந்திக்க வைத்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கணக்கில் இருக்கும் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் முக்கியமான தலைவர்களின் வெற்றியை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார். சாத்தூரில் உள்ள 291 வாக்குச்சாவடிகளிலும் பாஜக சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பிளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கும் சாத்தூர் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.

ராதிகா சரத்குமார் வாங்கிய வாக்குகள்

இது கூட்டணியாக பார்க்கும் போது ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் வந்துவிடும் என்கின்றனர். மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மூன்றாம் இடம் பிடித்தாலும் 1,66,271 வாக்குகள் பெற்றார். அதில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 20,000 வாக்குகள் அடங்கும். அதுமட்டுமின்றி 10 வாக்குச்சாவடிகளில் முதலிடத்தையும், 50 வாக்குச்சாவடிகளில் இரண்டாவது இடத்தையும் பாஜக பெற்றிருந்தது. இது 2026 தேர்தல் கூட்டணியாக பார்க்கும் போது பிளஸ் பாயிண்டாக மாறுகிறது.

திமுகவின் கடற்கரை ராஜிற்கு உள்ளூர் செல்வாக்கு

இதுதவிர மத்திய அரசின் நலத்திட்டங்களை முன்வைத்து தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மறுபுறம் திமுக சார்பில் கடற்கரை ராஜ் போட்டியிடுகிறார். எனவே திமுக vs பாஜக என நேரடி மோதலாக களம் மாறியுள்ளது. இவரும் தொகுதிக்கு நன்கு அறியப்பட்ட முகம். 20 ஆண்டுகளுக்கு மேல் அப்பகுதியில் கட்சி பணியாற்றியுள்ளார். மேலும் அந்த மாவட்ட அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இருக்கிறார். இவர் தனிப்பட்ட முறையில் கிராமம் கிராமமாக மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை விதைத்து வைத்திருக்கிறார்.

முக்குலத்தோர் சமூக வாக்குகள்

மேலும் சாத்தூர் தொகுதியில் உள்ள விஐபிக்கள், தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்களை சந்தித்து திமுக தரப்பு வாக்கு சேகரித்து வருகிறது. 2021 திமுக ஆட்சியில் செய்த சாதனைகள், 2026 தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்கின்றனர். இந்த தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக திமுக கூட்டணியை சேர்ந்த மதிமுகவின் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் இருக்கிறார். ஏற்கனவே தொகுதிக்குள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கிடையில் ராதிகா சரத்குமார் பெற்ற வாக்குகள், அமமுகவின் பலம், முக்குலத்தோர் சமூக செல்வாக்கு ஆகியவை சேரும் போது 2026 தேர்தல் ரேஸில் நயினார் நாகேந்திரன் ஒரு அடி முன்னே இருப்பதாக கூறுகின்றனர்.