தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பெரம்பூர் முல்லை நகர் பகுதியில் விஜய் இன்று பிரசாரம் தொடங்க இருந்த நிலையில், அனுமதி அறுப்பால் அவர் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள பாசிச தாக்குதல். தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி” என்று சாடியிருந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, முல்லை நகர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநகராட்சியால் திடீரென பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்காத சூழல் ஏற்படுத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இவ்விடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை.
சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.எனவே, அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஆணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
