சாலை விபத்தில் மூளைச்சாவு: அங்கன்வாடி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி மாவட்டம், இடைக்கால் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 49), அங்கன்வாடியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி மாலை 3 மணி அளவில் அம்பாசமுத்திரத்திலிருந்து அவர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அம்பாசமுத்திரம் ஆர்ட்ஸ் கல்லூரி அருகில், பின்னே வந்த கார் மோதியதில் விபத்துக்குள்ளான முனியம்மாள் பலத்த காயம் ஏற்பட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார். பின் அவர் உயர்சிகிச்சைக்காக 7ம் தேதி மாலை 5 மணியளவில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளார் என்பதனை தெரிவித்தனர். அதன்பின் 8ம் தேதியன்று அவரின் மூளையின் செயல்பாட்டை கண்டறிவதற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை முடிவில் அவருடைய மூளையின் செயல்பாடு இல்லை, அவர் மூளைச்சாவு அடைந்தார் என்பதனை குடும்ப உறவினர்களிடம் தெரிவித்தனர்.

அதன்பின் குடும்ப உறுப்பினர் உடன் ஆலோசித்து முனியம்மாளின் உடல் உறுப்புகளான கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவற்றை தானமாக கொடுக்க முன்வந்தனர். அதன் பின் நேற்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. பின்னர் அவரின் உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவர்கள் மரியாதை செலுத்தியபின், உறவினர்களிடம் நேற்று மாலையில் ஒப்படைக்கப்பட்டது.

Source link