சென்னை,
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பெற்ற சிஎஸ்கே அணி, இந்த ஆண்டு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளை பெற்று ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிஎஸ்கே சொதப்பி வருகிறது. தோனியின் காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. வரும் 11 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பார் எனத் தெரிகிறது.
அன்றைய போட்டியிலாவது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதற்கிடையே சென்னை அணியின் தோல்வியை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும், நகைச்சுவை பதிவுகளும் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சிஎஸ்கே ரசிகர் ஒருவர், சென்னை அணி படுதோல்விகளை சந்தித்து வருவதால் கெவின் பீட்டர்சனை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பீட்டர்சன், “தயவுசெய்து என்னை ஆலோசகராக்குங்கள். மாலத்தீவு சென்னைக்கு மிக அருகில்தான் உள்ளது. எனக்கு பயணம் செய்ய எளிதாக இருக்கும்” என ஜாலியாக கமென்ட் அடித்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லி அணியின் ஆலோசகராக இருந்த பீட்டர்சன், பாதி சீசனிலேயே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றது சர்ச்சையானது. அதை மறைமுகமாக குறிப்பிட்டு தன்னைத் தானே ட்ரோல் செய்துள்ளார்.
