சிம்புவின் “அரசன்” படப்பிடிப்பு நிறுத்தம் – டி.ராஜேந்தர் கண்டனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘அரசன்’. கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமீர், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து நடிகரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து விரிவான அறிக்கையில், ‘தான் ஒரு தந்தையாகவோ அல்லது நடிகனுக்காகவோ வாதாட வரவில்லை என்றும், தயாரிப்பாளர் சங்கமும் தொழிலாளர் சம்மேளனமும் அறம் தவறி நடந்து கொள்ளக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டவே வந்துள்ளதாகவும்’ கூறியுள்ளார்.

“வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசனுக்கு எதிராக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சிலம்பரசனின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக நான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினேன். அதில் நாங்கள் சட்டப்படி வெற்றியும் பெற்றோம். வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்காகக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை சிலம்பரசனையே சேரும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் நகல் எங்கள் கையில் பத்திரமாக உள்ளது.

பழைய வழக்கையும், பிரச்சனைகளையும் காரணம் காட்டி தற்போது நடைபெற்று வரும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பைத் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து நிறுத்தி வைத்திருப்பது எந்த வகையில் நியாயம். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இந்த பரபரப்பான காலகட்டத்தில், ஒரு வழக்கில் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பிறகும், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு படப்பிடிப்பை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

மேலும் தயாரிப்பாளர் சங்கம் ஒரு தயாரிப்பாளருக்காகத் துணை நிற்கும் போது, நடிகர் சங்கம் ஏன் ஒரு நடிகனுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது? தென்னிந்திய நடிகர் சங்கம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சிலம்பரசனுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ” டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link