சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் படத்தயாரிப்பாளரான எல்ரெட்குமார் கடந்த 2013-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “நடிகர் சிம்புவை வைத்துதான் தயாரிக்கவிருந்த படத்தை இயக்க கவுதம் வாசுதேவ் மேனனுடன் கடந்த 2008-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தேன். அதற்காக ரூ.4.25 கோடி முன்பணமாக வழங்கினேன். ஆனால் அந்த ஒப்பந்தப்படி அந்தப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித்தரவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாங்கிய தொகை ரூ.4.25 கோடியை படத்தயாரிப்பாளரிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கவுதம் வாசுதேவ் மேனன் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல் முருகன், கே.ஜி.திலகவதி ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் ரூ.4.25 கோடியை கவுதம் வாசுதேவ் மேனன், வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
