சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 38). இவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து வந்தார்.இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் இருந்த நிலையில், அந்த சிறுவர்கள் இருவரும் கேரளாவில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சிறுவர்கள் இருவரையும் தானே பராமரிப்பதாக கூறிய பாதிரியார், கேரளா வந்ததும் அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த அண்ணன்–தம்பியான அந்த சிறுவர்கள் இருவருக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுவர்களை இயற்கைக்கு மாறான முறையில் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக அந்த சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிரியாரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இது குறித்து சிறுவர்கள் இருவரும் தங்களது தாயிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் தாய், வடகரா போலீஸ் நிலையத்தில் பாதிரியார் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.தாயின் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், பாதிரியார் சிறுவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிரியார் சம்பத்தை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பாதிரியார் சம்பத் பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு இருந்து டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, பாதிரியார் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கேரளாவுக்கு அழைத்து வந்தனர்.சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கேரள மாநிலத்தில் வடகரா, முடப்பிலவு, தட்டொலிக்கரா உள்ளிட்ட பகுதிகளிலும், டெல்லி, பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களிலும் பாதிரியாராக பணியாற்றியுள்ளார். அந்த இடங்களிலும் அவர் இதுபோன்ற சம்பவங்களில் வேறு சிறுவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link