கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலை மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை மூலம் மேற்கு வங்காளத்தை “உடைக்க” முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
சிலிண்டர் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இப்போது 21 நாட்களுக்கு முன்பே சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என ஏன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா? மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கூட குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறீர்கள். இந்த உயர்வுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன..?
மத்திய அரசு, வங்காள மாநிலத்தை அரசியல் ரீதியாக குறிவைத்து தாக்குகிறது. இதனால்தான் எங்கள் வாக்குகளை நீக்க விரும்புகிறீர்களா? வங்காளத்தை உடைக்க விரும்புகிறீர்களா..? மற்றவர்கள் உங்களைப் பார்த்து பயப்படலாம், ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் உங்கள் முகமூடியை அகற்றுவோம்.
சிலிண்டர் விலை உயர்வு, மண்ணெண்ணெய் பற்றாக்குறை மற்றும் எஸ்.ஐ.ஆர். (SIR) செயல்பாட்டில் பெண்களின் பெயர்களை நீக்குவதற்கு எதிராக நாளை போராட்டம் நடத்தப்படும். “‘பாங் பெங்கால்’ என்ற திட்டம் உள்ளது, அது ஒரு திட்டமாகவே இருக்கும். முதலில் எப்ஸ்டீனைக் கையாளுங்கள். பின்னர் வங்காளத்தைப் பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
