சீமானின் பல கருத்துக்கள் நல்ல கருத்துக்கள் தான் நாங்கள் அதை கேலிக்குறியதாக எடுத்துக் கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆதரவாக பேசியுள்ளார்.
தொடர்ந்து சீமானின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சீமானின் பல கருத்துக்கள் நல்ல கருத்துக்கள் தான் நாங்கள் அதை கேலிக்குறியதாக எடுத்துக் கொள்ளவில்லை.மேலும் திமுக தேர்தல் அறிக்கை தொடர்பான அவர் சொல்லும் கருத்து அவருடையது என தெரிவித்தார். திராவிட அரசியலை கடுமையாக சாடிவரும் சீமான் திமுக எதிர்ப்பிலும், திமுகவின் நலத்திட்டங்களை எதிர்த்தும் அரசியல் செய்து வருகிறார். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது விமர்சனமாகியுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 5 தொகுதிகளில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளன. இந்த சூழலில்தான் தேர்தல் அறிக்கையினை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டார். அறிக்கை வெளியீட்டிற்கு பின்பு பேசிய அவர், “பொதுவுடைமை கருத்தால் உலக நாடுகளின் தொழிலாளர்களை ஒன்று கூட்டி உலகத்தின் முதல் அரசியல் அறிக்கையை உருவாக்கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். சோசியலிஸ்ட் பொதுவுடமை சமூகத்தை அது முன்னெடுத்தது.
இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தோழமை கட்சிகளில் இடையே பாலின முன்னேற்றம் குறித்து பேசப்பட்டுள்ளது. 1917 இல் லெனின் அதிகாரத்திற்கு வந்ததும் இடைப்பால் இனத்தவர்களுக்கு ரஷ்யாவில் ரஷ்ய குடிமக்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அந்த உரிமைகள் இடைப்பாலினத்திற்கு உண்டு என முதல் சட்டம் முன் வடிவை கொண்டு வந்தார் எனவும் இப்போது வரும் தேர்தல் வழக்கமான வந்து போகும் தேர்தல் இல்லை எனவும் அவர் பேசியிருந்தார்.
மேலும் அவர் “ஒரு கட்சி தோல்வியடைவது ஒரு கட்சி வெல்வது இயல்பு. ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக்கூடாது. உத்திரபிரதேசத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை பாஜக நெறித்துள்ளது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மதச்சார்பின்மையை சிதைக்கிறது. தமிழக முதல்வர் அதனால் தான் தமிழகம் வெல்லும் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார். இந்த முழக்கத்தில் இவ்வளவும் அடக்கம். தமிழகத்தில் ஒன்றிய அரசின் அதிகார குவியலுக்கு எதிராக நடைபெறும் தேர்தல் இது என பேசியிருந்தார்.
மேலும் “இது அரசியல் இதில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயக தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது நாங்கள் வெல்வோம் என பேசியுள்ளார். மேலும் அரசின் திட்டங்கள் வலுவாக இருப்பதாக பேசிய அவர், திமுக அரசின் தேர்தல் அறிக்கை பேசு பொருளாகியுள்ளது, நாங்கள் வெல்வோம் தமிழக மக்கள் மத அடிப்படை வாதத்தை ஏற்கமாட்டார்கள், அவரவர் கடவுளை வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை, ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மக்கள் நல்ல பாடத்தை சூட்டி உள்ளார்கள், எந்த சூழலிலும் மதவாதத்தை ஏற்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் அவர் பேசுகையில், “இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுகிறது. அதற்கு கதவுகளை பாஜக அரசு திறந்து விடுகிறது அதை நமது தேர்தல் அறிக்கை எதிர்க்கிறது. தமிழ் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை முன்னெடுக்க இந்த அறிக்கை முன்மொழிகிறது என பேசினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு உரிய கடமைகளை செய்யவில்லை நிதியை வழங்கவில்லை. விவசாய நலன், கைத்தறி தொழிலாளர்கள் நலன் காக்கப்படும் எனவும் பேசினார். தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லை வகுக்க வேண்டும் எனவும் அவர் பேசியிருந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழகம் வெல்லும் என்ற முழக்கத்தில் ஜனநாயக விழுமியங்களை காக்கும் காரணிகள் உள்ளது. இது ஜனநாயக போர் அதில் உடன் நாங்கள் இருக்கிறோம். உழைப்பாளி மக்களுடன் இருக்கிறோம், நாளை மறுநாள் கூட உழைக்கும் மக்களுக்காக அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த நாள் உழைக்கும் மக்களின் குரலாக நாங்கள் போராட்டத்தில் இருப்போம் என பேசியிருந்தார்.
மேலும், “சிபிஐ, சிபிஐஎம் எல்லாமே செங்கொடிதான் ஒரே கொள்கைதான் எங்களுக்குள் பிரிவினை கொண்டு வர வேண்டாம், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளை அப்படியே நாங்கள் முன்மொழிகிறோம் எனவும் அவர் பேசியிருக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து வரும்போது எல்லாம் இந்த பெரும்பான்மை மக்கள் அவர்களை அரவணைத்துள்ளார்கள். ஆர்எஸ்எஸ் பாஜகவினர் இதை உடைத்து சிதைக்க முடியாது அந்த பாடத்தை தமிழ் மண்ணிலிருந்து கற்பிப்போம் என்றார்.
