சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கோர விபத்து! யமுனையில் தலைகீழாகக் கவிழ்ந்த படகால் 10 பேர் உயிரிழப்பு! – a tragic accident during a tourist trip 10 people dead after a boat capsized upside down in the yamuna river

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனை நதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் துயரம்

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியிலிருந்து சுமார் 150 பேர் கொண்ட ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகள் குழுவினர் மதுரா மற்றும் பிருந்தாவனத்திற்கு வந்திருந்தனர். இவர்களில் ஒரு குழுவினர் இன்று பிற்பகல் சுமார் 2:45 மணியளவில் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற கேசி காட் (Keshi Ghat) அருகே யமுனை நதியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு நதியின் நடுவே நிலைதடுமாறி மிக வேகமாகச் சென்றுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த படகு, அங்கிருந்த மிதவைப் பாலம் (Pontoon Bridge) மீது பயங்கரமாக மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது.

கல்குவாரி விபத்து – உடனடியாக தொடர்பு கொண்ட முதல்வர்

10 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணி தீவிரம்

படகு கவிழ்ந்ததும் அதில் இருந்தவர்கள் ஆற்று நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த உள்ளூர் மக்களும் படகோட்டிகளும் உடனடியாக ஆற்றில் குதித்து பலரைக் காப்பாற்றினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப்படை (SDRF) மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இந்த விபத்தில் 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கி மாயமான மேலும் சிலரைத் தேடும் பணி 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியுடன் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தலைவர்கள் இரங்கல்

இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாகச் செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக பாரம் ஏற்றியதே காரணம்

15 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகப் படகில் விதிமுறைகளை மீறி சுமார் 25 முதல் 30 பேரை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
படகைக் கைவிட்டு ஓடிய ஓட்டுநர்: படகு கவிழ்ந்தவுடன், பயணிகளைக் காப்பாற்ற முயலாமல் படகோட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விபத்தில் இருந்து உயிர் தப்பிய லூதியானாவைச் சேர்ந்த தனிஷ் ஜெயின் என்ற பயணி கூறுகையில், பாலத்திற்கு அருகில் செல்லும்போதே மெதுவாகச் செல்லுமாறு படகோட்டியிடம் நாங்கள் எச்சரித்தோம். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. படகு இரண்டு முறை மோதலில் இருந்து தப்பிய நிலையில், மூன்றாவது முறை பாலத்தின் இரும்புப் பகுதியில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை: விபத்தின்போது படகில் இருந்த யாருமே உயிர் காக்கும் கவச உடைகள் (Life Jackets) அணியவில்லை என உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source link