நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக கருப்பு படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரலானது. ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியிடப்பட்டது.
சமீபத்தில்,‘கருப்பு’ திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்து படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இத்துடன் பாடலாசிரியர் மற்றும் பாடகர் பால் டப்பாவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை இணைத்துள்ளார். அதன்படி கருப்பு படத்தின் அடுத்த பாடலையும் பால் டப்பா எழுதி பாடியிருக்கலாம் என்று தெரிகிறது. ‘கருப்பு’ திரைப்படத்தின் அடுத்த பாடல் தமிழ் புத்தாண்டுக்குள் வெளியாகும் என்று ‘எல்.ஐ.கே’ பட விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தமிழ் புத்தாண்டு தினமான வருகிற 14-ந்தேதி அன்று வெளியாகும் என்றும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
