சென்னை,
சென்னையில் நடந்த ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
1.80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாகச் சென்று கனவு, தேவைகள் எதிர்பார்ப்புகளை கேட்டுள்ளோம். மக்கள் கருத்துகளை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு வளர்ச்சிக்கான 14 அம்சங்களை அறிமுகப்படுத்துகிறேன்.
தேவைப்படும் அனைவருக்கும் போதிய மருத்துவக்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலை சிறப்பு முகாம் அமைக்கப்படும். தாய் சேய் நலனில் IMR மற்றும் MMR-ஐ குறைக்கும் தரவரிசையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
2030ம் ஆண்டுக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தமாக 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் சாவியை ஒப்படைப்போம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. 10 கிராமங்களில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் இப்போதே செயல்படுத்தப்படும்.
2030ம் ஆண்டுக்குள் இடை நிற்றல் இல்லாத பள்ளிக்கல்வி. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 90% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும்.
2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் Al ஆய்வகம் உருவாக்கப்படும். 100 சதவீதம் SMART CLASSROOMகள் அமைக்கப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதே இலக்கு.
சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் அதை தன்வசப்படுத்தி செல்வதுதான் என்னுடைய ஸ்டைல்.. நெகட்டிவ்களையும் பாசிட்டிவ்களாக மாற்றி சாதனைகளை செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
