ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் நாளை நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. ஆதித்ய தரின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், ஆர். மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சிபிஎப்சி (மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம்) வெளியிட்ட சான்றிதழ் அறிக்கை இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அந்த அறிக்கையின் படி, படத்தின் பல மாற்றங்கள் மற்றும் காட்சிக் குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், படத்தின் நீளமும் குறைந்துள்ளது.
படத்தில் மியூட்கள், கட்டுகள் என மொத்தம் 21 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 காட்சிகளை மாற்ற சிபிஎப்சி பரிந்துரைத்துள்ளது. அவை அனைத்தும் கடுமையான வன்முறை காட்சிகளை கொண்டதாகும். கண்களை சேதப்படுத்தும் காட்சி, தலை வெட்டும் மற்றும் உதைக்கும் காட்சி, சிமெண்டு கல்லால் தலையில் அடிக்கும் காட்சி, சுத்தியலால் தலையில் தாக்கும் காட்சி ஆகியவை கட்டில் சிக்கியுள்ளன. மேலும் சப் டைட்டில்களில் பணமதிப்பிழப்பு தொடர்பான தேதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தகவல் குறிப்புகளில் இருந்த “லாகூர்” என்ற இடப்பெயர் “டெல்லி” என மாற்றப்பட்டுள்ளது.
இந்த படம் முதலில் தணிக்கை வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, சுமார் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் இருந்து தணிக்கை வாரியம் கூடுதலாக சுமார் 1.3 நிமிடங்கள் குறைக்க உத்தரவிட்டதால், மொத்த மாற்றங்களுடன் சேர்த்து படத்தின் நீளம் 6 நிமிடங்களுக்கு மேல் குறைந்துள்ளது. ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் வெளிநாட்டு எடிஷன் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். இந்தியாவில் 3 மணி நேரம் 49 நிமிடங்கள் நீளம் கொண்டதாக இந்த படம் திரையிடப்பட உள்ளது.
