சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் முந்துவது யார்? திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்கள் வியூகம்! – dmk tvk candidates plan decoded in chennai constituencies 2026 assembly election

தலைநகர் சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்று விரிவாக அலசலாம். இங்கு திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

Chennai Constituencies tough contest for DMK AIADMK TVK(புகைப்படங்கள்Samayam Tamil)
சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் எழும்பூர், திரு.வி.க நகர் ஆகிய 2 தொகுதிகள் தனித் தொகுதிகள். 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னைக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் திமுக 15 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12 தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. இதனுடன் தவெக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களமிறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1) ஆர்.கே.நகர் தொகுதி

அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ எபினேஷ், தவெக சார்பில் மரிய வில்சன் (ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்) போட்டியிடுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆர்.எஸ்.ராஜேஷ் மாவட்ட செயலாளராக பல்வேறு களப் பணிகளை செய்திருக்கிறார். எனவே மூன்று கட்சிகளுக்கும் கடினமான போட்டி ஏற்பட்டுள்ளது.

2) பெரம்பூர் தொகுதி

தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவது கவனிக்கத்தக்கது. இங்கு திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி மக்களிடம் விசாரிக்கையில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் சூழல் நிலவுகிறது.

முதல்ல உடைக்கபோறது திமுகவோட கோட்டையை தான்- விஜய் போடும் மாஸ்டர் பிளான்

3) கொளத்தூர் தொகுதி

திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் பி.சந்தானகிருஷ்ணன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிடுகிறார். இதில் வி.எஸ்.பாபுவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. கட்சி ரீதியாக பல்வேறு செயல்பாடுகள் மூலம் மக்களிடம் கவனம் ஈர்த்துள்ளார். இவர் எந்தளவிற்கு வாக்குகளை பிரிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன.

4) வில்லிவாக்கம் தொகுதி

தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா, திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் கார்த்திக் மோகன் அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ மோகனின் மகன். 2026 தேர்தலில் தந்தைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல் மகனுக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. எஸ்.ஆர்.விஜயகுமார் மாவட்ட செயலாளராக இருப்பதால் சற்று செல்வாக்குடம் வலம் வருகிறார். தவெகவில் விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் பெரிதாக ஒலித்து வருகிறது. இங்கு மூன்று கட்சிகளுக்கு டஃப்பான மோதல் இருக்கிறது.

5) திரு.வி.க நகர் தொகுதி (தனி)

அதிமுக சார்பில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார். இவர் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தனிப்பட்ட செல்வாக்கு, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு களம் காண்கிறார். திமுக சார்பில் கே.எஸ்.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். சிட்டிங் எம்.எல்.ஏ பி.சிவக்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் பல்லவி களமிறங்குகிறார். இந்த தொகுதியிலும் கடினமான போட்டியை எதிர்பார்க்கலாம்.

6) எழும்பூர் தொகுதி (தனி)

அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி, திமுக சார்பில் தமிழன் பிரசன்னா, தவெக சார்பில் ராஜ்மோகன் போட்டியிடுகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழன் பிரசன்னா ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசக்கூடியவர். ராஜ்மோகனும் யூடியூப் போன்ற தளங்களில் தீவிரமாக இயங்கக் கூடியவர். இவர் தவெக கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் இருக்கிறார்.

7) ராயபுரம் தொகுதி

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திமுக சார்பில் சுபேர் கான், தவெக சார்பில் கோகுல் போட்டியிடுகின்றனர். ஐடிரீம்ஸ் மூர்த்திக்கு சீட் மறுக்கப்பட்டு புதுமுகமான சுபேர் கானுக்கு திமுக சீட் வழங்கியுள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணி காரணமாக தோல்வி அடைந்ததாக ஜெயக்குமார் கூறியிருந்தார். இம்முறை வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது சுவாரஸியமாக மாறியுள்ளது.

8) துறைமுகம் தொகுதி

அதிமுக ஆர்.மனோ, திமுக சேகர்பாபு, தவெக சினோரா அசோக் போட்டியிடுகின்றனர். சிட்டிங் அமைச்சரின் தொகுதி, எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின்னர் மிகக் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி போன்ற விஷயங்களால் துறைமுகம் தொகுதி கவனம் பெற்றிருக்கிறது. எனவே வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கக் கூடும்.

9) சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி

திமுக உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆதிராஜாராம், தவெக டி.செல்வம் போட்டியிடுகின்றனர். கடந்த முறை உதயநிதிக்கு எதிராக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தார். இம்முறை நேரடியாக அதிமுகவே களமிறங்குகிறது. இதில் டி.அசோக் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்தவர். ஆதிராஜாராம் கடந்த முறை ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்ட நிலையில், இம்முறை உதயநிதிக்கு எதிராக இறங்குவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.

10) ஆயிரம் விளக்கு தொகுதி

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, திமுக சிட்டிங் எம்.எல்.ஏ எழிலன், தவெக ஜே.சி.டி பிரபாகர் களம் காண்கின்றனர். இதுவும் டஃப்பான போட்டி நிலவுகிறது. கடந்த முறையை போல மிக எளிதான வெற்றியை எழிலன் பெறுவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

11) அண்ணா நகர் தொகுதி

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திமுக சிற்றரசு, தவெக ராம்குமார் போட்டியிடுகின்றனர். இங்கு திமுக, அதிமுக இடையில் நேரடி போட்டிக்கு வாய்ப்பிருக்கிறது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.கே.மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

12) விருகம்பாக்கம் தொகுதி

அதிமுக வி.என்.ரவி, திமுக பிரபாகர் ராஜா, தவெக சபரிநாதன் போட்டியிடுகின்றனர். இங்கு பிரபாகர் ராஜா மீது அதிருப்தி நிலவி வருகிறது. இங்கு அதிமுக எந்த அளவிற்கு வாக்குகளை பிரிக்கிறதோ, அதன்படி வெற்றி வாய்ப்பு அமையும்.

13) சைதாப்பேட்டை தொகுதி

அமமுக செந்தமிழன், திமுக சிட்டிங் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தவெக அருள் பிரகாசம் போட்டியிடுகின்றனர். செந்தமிழனின் சொந்த செல்வாக்கு மற்றும் அதிமுகவின் வாக்குகள் ஒன்று சேரும் போது வாக்கு வங்கி உயரும். இது மா.சு.,க்கு டஃப் போட்டியாக மாறக்கூடும்.

14) தி.நகர் தொகுதி

அதிமுக சத்யா, திமுக ராஜா அன்பழகன், தவெக புஸ்ஸி ஆனந்த் போட்டியிடுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவிற்கு முதல்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 137 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யா தோல்வி அடைந்தார். திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக இடையில் நேரடி போட்டியாக மாறியுள்ளது.

15) மயிலாப்பூர் தொகுதி

திமுக சிட்டிங் எம்.எல்.ஏ த.வேலு, தவெக பொருளாளர் வெங்கட்ராமன் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுவார் என்கின்றனர். இதில் வெற்றி வாய்ப்பை கணிப்பது சற்று சிரமமாக மாறியுள்ளது. கூட்டணி பலத்தால் பாஜகவிற்கு கூடுதல் வாக்குகள் விழக்கூடும்.

16) வேளச்சேரி தொகுதி

அதிமுக எம்.கே.அசோக், தவெக ஆர்.குமார் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பல்வேறு அதிருப்திகள் நீடித்து வருவது கவனிக்கத்தக்கது.