சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விளையாட்டின் மூலம் கற்றுக்கொள் (Fun and Learn) என்ற தலைப்பில் பள்ளிகளுக்கு இடையேயான குழந்தைகள் திருவிழா கொண்டாடப்பட்டது. சென்னை வாழ் நாடார்கள் சங்கம் மற்றும் காமராஜ் கல்வி ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் தங்கமுத்து தலைமையில், சங்கப் பொதுச் செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகிக்க பள்ளியின் முதல்வர் ராஜராஜேஸ்வரி வரவேற்று பேசினார். இதில் புழல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 மழலையர் பள்ளிகள் டிவைன் பட்ஸ், குருகுலம், லிட்டில் பேர்ல்ஸ், மாடல் லெஜெண்ட்ஸ், சுபம் மற்றும் டைனி கென் கென்ஸ்யா போன்ற பள்ளிகள் தங்களது குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர், தாத்தா பாட்டிகளுடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் கதை சொல்லுதல், வண்ணம் தீட்டுதல், ரைம்ஸ் சொல்லுதல், திருக்குறள் ஒப்புவித்தல் என வகுப்பறை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசாக க்ரையான்ஸ் வழங்கப்பட்டன. விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக அனைத்து பள்ளிகளின் சார்பாக குழந்தைகள் கலந்து கொண்டு அணி வகுப்பு நடத்தப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு திருவிழா ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விழாவை திவ்யா மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். பெற்றோருக்கான விளையாட்டுகளில் தந்தையருக்கான போட்டி தனியாகவும், தயாருக்கான போட்டி தனியாகவும், தந்தை தாய் இருவருக்கும் சேர்ந்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் பாட்டி தாத்தாக்களுக்கான விளையாட்டுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோரும், தாத்தா, பாட்டிகளும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்த நாளை மிகவும் இனிமையான முறையில் சந்தோஷமாக மகிழ்ந்ததாக பள்ளி நிர்வாகத்தை பாராட்டி சென்றனர். கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் சிறந்த பங்களிப்புக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
