சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026க்கான அறிவிப்பினைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்காக சுமார் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிப் பணிக்காக சுமார் 19,594 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி, வரும் 28.03.2026 அன்று சென்னை மாவட்டத்திலுள்ள 16 மையங்களில் தேர்தல் மண்டல அலுவலர்கள் மூலமாக அளிக்கப்படவுள்ளது.
தேர்தல் பணிக்காக 415 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது தொடர்பாக இன்று (26.03.2026) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது,
இந்த புத்தாக்க பயிற்சியில் தேர்தல் நடைமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்தும், வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடிகளை சரியாக அமைப்பது குறித்தும், வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது குறித்தும், வாக்கு இயந்திரங்களை சரியாக பயன்படுத்துவது குறித்தும், பல்வேறு படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களின் பல்வேறு நிலைகள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
பயிற்சி மையங்களில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளின் விவரங்கள் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவால் விரிவாக விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்), சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
