சென்னை,
சென்னையில் நாளை ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“2026 சட்டமன்ற தேர்தலில் வெளியிட வேண்டிய மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவினை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்து ஆலோசிக்க, இக்குழுவின் கூட்டம் நாளை 03.02.2026 காலை 10 மணிக்கு தலைமை கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ், கழக பொருளாளர் மு.செந்திலதிபன் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள துணை பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், சட்டத்துறைச் செயலாளர் சூரி.நந்தகோபால், தணிக்கைக் குழு உறுப்பினர் ரா.செந்தில்செல்வன், இலக்கிய அணிச் செயலாளர் காரை செல்வராஜ், இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
