சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரியூனியன் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள்

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை ரசிகர்களை சந்தித்து மகிழ்விக்க சி.எஸ்.கே. சார்பில் ‘ரோர் 26’ என்ற பெயரில் மெகா ரசிகர்கள் திருவிழா சேப்பாக்கத்தில் நேற்று அரங்கேறியது. இதில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

*சி.எஸ்.கே. வீரர்களின் ரியூனியன் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் மஞ்சள் சீருடையுடன் குவிந்தனர். முதலில் டோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதை ஆரவாரமாக கண்டுகளித்த ரசிகர்கள் செல்போனில் ஆர்வமாக படம் பிடித்தனர்.

*வெவ்வேறு காலக்கட்டங்களில் சென்னை அணிக்காக ஆடிய ‘சின்ன தல’ என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், மைக் ஹஸ்சி, டுவெய்ன் பிராவோ, முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், பத்ரிநாத், முரளி விஜய், ஜோகிந்தர் ஷர்மா, ஜகாதி, அனிருதா, அம்பத்தி ராயுடு, எல். பாலாஜி உள்ளிட்டோர் மைதானத்திற்குள் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

*முன்னாள் வீரர்கள் ஜாலியாக காட்சி போட்டியில் விளையாடினர். நடப்பு சென்னை பவுலர்கள் பந்து வீச, அதை ஹஸ்சி, ரெய்னா, ஹைடன், ராயுடு என ஒவ்வொருவராக எதிர்கொண்டு பேட்டிங் செய்தனர். ஹஸ்சி அடித்த பந்து சிக்சருக்கு பறக்க மைதானம் அதிர்ந்தது.

*பிராவோ பேட்டிங் செய்யும் போது இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் பேட்டில் படாமல் கீப்பராக நின்ற டோனியிடம் பந்து சென்றது. அவர் ஸ்டம்பிங் செய்வது போல் பாவனை செய்து கலகலப்பூட்டினார்.

மேலும் , விக்கெட் கீப்பிங் செய்த டோனி, அவ்வப்போது அவர்களை கிண்டலடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

*20 ஓவர் உலகக் கோப்பையை வென்றவர்களான சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜூனியர் உலகக் கோப்பையை வென்றவரான ஆயுஷ் மாத்ரே ஆகியோர் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து வீரர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

*இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் கச்சேரியால் அரங்கம் அதிர்ந்தது. 4 மணி நேரம் நீடித்த இந்த ‘கலர்புல்’ நிகழ்ச்சியை 23 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

*சென்னை அணி புதிதாக அறிமுகப்படுத்திய புகழ்பெற்ற வீரர்களுக்கான ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் ஹைடன், ரெய்னா இணைக்கப்பட்டனர்.

*ஏ.ஆர். ரஹ்மானுடன் டோனி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Source link