சென்னை-தூத்துக்குடி இரவு நேர விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி,

தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் நான்கு அல்லது ஐந்து விமான சேவைகள் இருந்தாலும் அவை அனைத்துமே பகல் நேர சேவைகளாகவே இருந்து வருகிறது. இதனால் இரு மார்க்கங்களில் இருந்தும் காலையில் பணி நிமித்தமாக பயணிப்பவர்கள் ஒரே நாளில் திரும்ப வேண்டும் என்றால் மிகவும் அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல் ஒரு இரவு கண்டிப்பாக தங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னை- தூத்துக்குடி வழித்தடத்தில் இரவு நேர சேவை இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், பயணிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தூத்துக்குடி – சென்னைக்கு இரவு நேர விமான சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக நேற்று இரவு விமான சேவையை தொடங்கப்பட்டுள்ளது. முதல் விமான சேவை என்பதால், விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளுக்கு பூச்செண்டு கொடுத்து விமான நிலைய ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து விமான நிலைய இயக்குனர் தலைமையில் பயணிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் விமானம் தூத்துக்குடிக்கு இரவு 7.55க்கு வந்தடைகிறது. பின்பு தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம் 9.45 க்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறது. இந்த விமான சேவை தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும்.

Source link