சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில் தவெக கட்சியை சார்ந்தவர்கள் பொதுமக்களிடம் சர்வே எடுக்க வந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனுமதியின்றி இதனை செய்ய முயற்சி செய்தததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தவெகவினரை அனுமதி இல்லாமல் சர்வே எடுக்கக்கூடாது திமுக தடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கை கலப்பு உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்” என்று பதிவிட்டுள்ளார்.
