தலைநகர் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் கீழ் 3 வந்தே மெட்ரோ சேவை
இதில் வந்தே மெட்ரோ மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தமிழகத்தின் தலைநகர் உடன் விரைவாக பயணம் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். இதுவரை அகமதாபாத் – பூஜ், ஜெய்நகர் – பாட்னா ஆகிய இரண்டு வழித்தடங்களில் மட்டும் வந்தே மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. அடுத்தகட்டமாக பரிந்துரை பட்டியலில் உள்ள 9 வழித்தடங்களில் தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை – திருப்பதி, திருவனந்தபுரம் – எர்ணாகுளம், திருச்சூர் – கோழிக்கோடு ஆகிய மூன்று சேவைகள் இருக்கின்றன.
சென்னை – புதுச்சேரி ரூட்டில் அதிவிரைவு ரயில்
இதனுடன் புதுச்சேரி பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை – புதுச்சேரி வந்தே மெட்ரோ சேவையும் சேர்ந்து கொண்டது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து, அதன்பிறகு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, ரயில்வே துறையின் பல்வேறு படிநிலைகளில் ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க சில ஆண்டுகள் ஆகிவிடும். போதிய முன்னெடுப்புகளை விரைந்து எடுத்தால், எப்படியும் அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளது.
புதுச்சேரி செல்ல வெறும் 2 மணி நேரம் மட்டுமே
தற்போது சென்னை – புதுச்சேரி இடையில் பயணம் செய்யும் பேருந்துகள் மூலம் பயணிக்க 3.5 முதல் 4.5 மணி நேரம் வரை ஆகிறது. ரயில் சேவையாக இருந்தால் குறைந்தது 4 மணி நேரத்தை தாண்டி விடுகிறது. தனி நபர் வாகனங்கள் மூலம் சென்றாலும் கூட 3 முதல் 3.5 மணி நேரம் ஆகிறது. இத்தகைய சூழலில் வந்தே மெட்ரோ வந்தால் முழுவதும் உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை போன்றே வழித்தடம் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும். இதற்காக பிரத்யேக ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
சுற்றுலா பயணிகள், மாணவர்களுக்கு வரப் பிரசாதம்
இதன்மூலம் இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும் என்கின்றனர். இது யாருக்கெல்லாம் பயனளிக்கும் என்று ஆய்வு செய்தால், தினசரி பயணிக்கும் ஊழியர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்பவர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு உதவிகரமாக இருக்கும். விரைவாக பயணிக்கலாம். சரக்குகளை விரைந்து கொண்டு செல்லலாம். கல்வி, வேலை, மருத்துவம் போன்ற தேவைகளுக்கான தினசரி பயணம் எளிதாகிவிடும்.
ஈசிஆர் ரூட்டில் வளரும் 4 துறைகள்
சென்னை – புதுச்சேரி வந்தே மெட்ரோ ரயில் சேவையால்,
- சுற்றுலா மற்றும் சேவைத் துறை – புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி அடையும். ஓட்டல்கள், உணவகங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு மக்களின் வருகை அதிகரிக்கும். இதன்மூலம் அரசு மற்றும் தனியாருக்கு வருமானமும் பெருகும்.
- ரியல் எஸ்டேட் – ரயில் வழித்தடத்தை ஒட்டிய பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயரும். இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மால்கள் எனப் பலவும் அடுத்தடுத்து வந்து சேரும்.
- சுகாதாரம் – மருத்துவ துறையின் ஹப்பாக சென்னை திகழும் சூழலில், புதுச்சேரி மற்றும் ஈசிஆர் வழித்தடத்தில் வசிப்பவர்கள் விரைவாக வந்து செல்ல வந்தே மெட்ரோ சேவை உதவும்.
- கல்வி – இரு நகரங்களிலும் மற்றும் இடைப்பட்ட வழித்தடத்திலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு படிக்கும் வரும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் உற்சாகம் அளிக்கும். புது கல்வி நிறுவனங்கள் கால் தடம் பதிக்கவும் உதவும்.
இந்த நான்கு துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
