மைசூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி நவ்யா. இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந் தைக்கு சின்மயி என்று பெயரிட்டு இருந்தனர். 7 மாதம் ஆன நிலையில் குழந்தை தவழ்ந்து விளையாடி வந்தது.
இந்த நிலையில் வீட்டில் நவ்யா பூஜை செய்தார். இதற்காக அவர் வீட்டை சுத்தப்படுத்தி செம்பருத்தி பூவை கதவு பகுதி யில் அலங்கரித்து வைத்திருந்தார். அங்கு குழந்தை சின்மயி தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. நவ்யா உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றிருந்தார். சுதர்சன் வெளியே சென்றிருந்தார்.
குழந்தை சின்மயி, கதவின் அருகே தவழ்ந்து சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த செம்பருத்தி பூவை எடுத்து கடித்துக் கொண்டிருந்த குழந்தை, அதன் காம்பு பகுதியை விழுங்கிவிட்டது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதை கவனித்த குழந்தையின் அண்ணன், அதன் வாயில் இருந்து செம்பருத்தி பூவின் காம்பை எடுக்க முயன்றான்.
ஆனால் அது முடியாமல் போனது. மேலும் அது குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை கவனித்த நவ்யாவும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக குழந் தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், சுவாசக்குழாயில் செம்பருத்தி பூவின் காம்பு சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.
அதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சின்மயி பரிதாபமாக இறந்தது. இதனால் நவ்யாவும், சுதர்சனும் கதறி அழுதனர். அவர்களது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
