நெல்லை,
நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜா (44 வயது). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18 வயது). இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவி சரியாக படிக்காமல் செல்போனை பார்த்து வந்ததாகவும், இதை அவரது தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனை, தர்மராஜா வாங்கிக்கொண்டு மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ராமலட்சுமி விரக்தியில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு தூங்க சென்ற ராமலட்சுமி, திடீரென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் அவரது அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ராமலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
