சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை அளித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை தன்னிடம் கையிருப்பாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரமும், மனைவியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் இருப்பதாக கூறியுள்ளார். தனது பெயரில் ரூ.66 லட்சத்து 51 ஆயிரத்து 836 மதிப்பில் ஒரு கார் இருப்பதாகவும், மனைவி பெயரில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான காரும், ரூ.20 லட்சத்து 76 ஆயிரத்து 740 மதிப்பிலான மற்றொரு காரும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் தங்க நகைகள் எதுவும் இல்லை எனவும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 66 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 1,750 கிராம் தங்க நகைகளும், ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் கிராம் வெள்ளி இருப்பதாகவும் கூறியுள்ளார். அசையும் சொத்துகளாக தனது பெயரில் ரூ.1 கோடியே 48 லட்சத்து 78 ஆயிரத்து 54-ம், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 734-ம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல, தனது பெயரில் ரூ.45 கோடியே 44 லட்சத்து 17 ஆயிரத்து 365 மதிப்பிலான அசையா சொத்துக்களும், தனது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல, தன் மீது 9 குற்ற வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
